3/13/2018 3:53:51 PM
ஆஸ்கர் விருதில் கலக்கி இருந்த இந்தப் படம், இப்போது சென்னை பகுதியில் திரைக்கு வந்துள்ளது. வினோத உருவங்கள், விலங்குகளை வைத்து மனிதர்களுக்கு அன்பைப் பற்றி பாடம் நடத்துவது ஹாலிவுட் ஸ்டைல். ஈடி, கிங்காங், பிளானட் ஆஃப் தி ஏப் என, பல படங்களைச் சொல்லலாம். அந்த வரிசையில் வந்துள்ள படம் இது. கதை நடப்பது 1962ம் ஆண்டு. அப்போது அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. ரஷ்யா விண்வெளிக்கு ஒரு நாயை அனுப்புகிறது. அதற்குப் பதிலடியாக, ஏதாவது செய்ய நினைக்கிறது அமெரிக்கா. அப்போது கர்னல் ரிச்சர்ட் ஸ்ட்ரிக்லேண்ட் (மைக் கேல் ஷான்மோன்), தென் அமெரிக்காவின் கடற்பகுதியில் இருந்து ஒரு வினோத உருவம் கொண்ட உயிரினத்தைப் பிடித்து வருகிறார். அது மனிதனைப் போல் இருந்தாலும், பார்ப்பதற்கு அருவெறுப்பான தோற்றத்தைக் கொண்டது. தண்ணீரில் மட்டும் வாழக்கூடியது. அந்த மிருகத்தை வைத்து ஏதாவது ஒன்று செய்து, ஆராய்ச்சியில் ரஷ்யாவை முந்த நினைக்கிறார்கள். அதற்கான ஆராய்ச்சிகள், பால்டிமோரில் உள்ள ராணுவ ஆய்வுக்கூடத்தில் நடந்து வருகிறது. இந்த ஆய்வுக்கூடத்தில், இரவு நேர துப்புரவுத் தொழிலாளி யாக வேலை செய்கிறார், எலீசா (ஷெல்லி ஹவ்கின்ஸ்). காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி அவர். தண்ணீர் தொட்டியில் அடைக்கப்பட்டுள்ள அந்த மிருகத்தின் மீது அன்பும், அக்கறையும் காட்டுகிறார் எலீசா. காலப்போக்கில் அது காதலாக மலர்கிறது. ஒருகட்டத்தில் இந்த வினோத உயிரினத்தை அறுத்துக் கூறுபோட்டு, ஆராய்ச்சி செய்ய முடிவு எடுக்கிறார் அந்த கர்னல். இதையறிந்து பதறிப்போகும் எலீசா, அதை ஆய்வுக்கூடத்தில் இருந்து கடத்துகிறார். ராணுவம், அரசு இரண்டும் எலீசாவையும், அந்த உயிரினத்தையும் வலைவீசி தேடுகிறது. நண்பர்களும், தோழிகளும் எலீசாவுக்கு உதவி செய்கிறார்கள். வெல்வது அன்பா, ஆயுதமா என்பது மீதி கதை.
தி டெவில்ஸ் பேக்போன், பேன்ஸ் லேபிரிந்த் படங்களை இயக்கியுள்ள கியார்மோ டெல் டோரா, இதையும் ஒரு போர்ச்சூழலுக்கு இடையில் நடக்கும் படமாக, பேன்டஸியைக் கலந்து கொடுத்திருக்கிறார். வழக்கமாக குழந்தைகளை மகிழ்விக்கும் படமாகவும், பெரியவர்களுக்கு அறிவுரை சொல்லும் படமாகவும் அவருடைய படங்கள் இருக்கும். இதுவும் அப்படியே. எலீசாவாக ஷெல்லி ஹவ் கின்ஸ், அவரது கறுப்பு இன தோழியாக ஆக்டிவா ஸ்பென்சர், கொடூர வில்லனாக மைக்கேல் ஷான்மோன் ஆகியோர் அந்தந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர். ‘நீ காதலிப்பதும், காப்பாற்ற நினைப்பதும் ஒரு மனிதன் அல்ல’ என்று தோழி சொல்ல, ‘காப்பாற்றாவிட்டால் நான் மனுஷி கிடையாது’ என்று எலீசா பதில் சொல்கிறார். இதுபோன்ற நறுக் வசனங்கள், இந்தப் படம் முழுக்க ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது. 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளியஇந்தப் படம், அத்தனைக்கும் தகுதியான படம்தான்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment