ரஜினியின் கருத்தை கிண்டல் செய்து தயாரிப்பாளர் சி.வி.குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த பலர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களை நேரில் சென்று நேற்று சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். மேலும், சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரின் குடும்பத்துக்கும் தலா 2 லட்ச ரூபாய் உதவித்தொகை வழங்குவதாகவும் அறிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “குடியிருப்பை, ஆட்சியர் அலுவலகத்தை எரித்தவர்கள் சாதாரண மக்கள் கிடையாது. விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் அதன் உள்ளே நுழைந்துள்ளார்கள், அவர்கள் வேலைதான் இது. நாம் போராட்டம் நடத்தும் போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜல்லிக்கட்டில் கூட அப்படித்தான் நடந்தது. இந்த புனிதமான போராட்டம் வெற்றி கிடைத்தாலும் கூட அது ரத்தக்கறையுடன் முடிந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகிகள் உண்மையான மனிதர்களாக இருந்தால் இத்தனை உயிர்பலி வாங்கிய பின்னர் ஆலையை திறக்கக்கூடாது. எந்த அரசும் இதை அனுமதிக்காது. தமிழகத்தில் அடிக்கடி போராட்டங்கள் நடக்கிறது. சிலர் நல்லதுக்கும் போராடுகிறார்கள். சிலர் போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள். மக்கள் மிகவும் ஜாக்கிரதையா இருக்க வேண்டும்.
தமிழகத்தில் போராட்டம் நடந்தால் எந்த தொழில் முதலீடும் வராது. எந்த வியாபாரிகளும் வரமாட்டார்கள். வேலை வாய்ப்பும் கிடைக்காது. இளைஞர்களும் கஷ்டப்படுவார்கள். ஏறகெனவே தண்ணீர் கிடையாது. விவசாயம் பாதிக்கிறது. வேலை வாய்ப்பும் குறைந்தால் சரியாக இருக்காது. ரொம்ப க்ஷ்டமாகி விடும்.
இதுபோன்ற போராட்டம் நடக்கும் போது ரொம்ப கஷ்டமாகி விடும். போராட்டம் நடக்கும் போது அரசாங்கம் அனுமதி கொடுக்கும் போது அனைத்து நிபந்தனைகளையும் பார்த்துதான் அனுமதி கொடுக்க வேண்டும். பிரச்சினைகளை நீதிமன்றம் மூலம் தான் தீர்க்க வேண்டும்’’ எனக் கூறினார்.
போராட்டம் நடத்தக்கூடாது என ரஜினி தெரிவித்த கருத்துக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி.குமார், “யாரும் மக்கள் பிரச்சினைக்கு போராடாதீங்கப்பா... 80 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு எடுக்க கடுமையாக போராடுங்கப்பா...” என நக்கலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் சி.வி.குமார். ரஜினி நடிப்பில் அடுத்த வாரம் ‘காலா’ படம் ரிலீஸாக இருக்கிறது. ரஜினி படம் என்றாலே சில நாட்களுக்கு டிக்கெட் விலை எகிறிவிடும். அதைத்தான் சி.வி.குமார் குறிப்பிட்டுள்ளார்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment