ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 42 வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. ரிஷாப் பன்ட் 63 பந்துகளில் 128 ரன்கள் குவித்தார்.
பின்னர் களமிறங்கிய ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. தவான், 4 சிக்சர், 9 பவுண்டர்களுடன் 50 பந்துகளில் 92 ரன்களும் வில்லியம்சன் 2 சிக்சர், 8 பவுண்டர்களுடன் 53 பந்துகளில் 83 ரன்களும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருது ஷிகர் தவானுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் தவான் கூறும்போது, ‘இந்தப் போட்டியில் ரிஷாப் பன்ட் சிறப்பாக விளையாடினார். தனி ஒருவராக இந்தப் போட்டியை எங்களிடம் இருந்து பறித்துவிட்டார் என்று நினைத்தோம். ஆனால், நாங்கள் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தோம். அதற்கு பலன் கிடைத்தது. நான் வழக்கம் போல அடித்து ஆடினேன். இந்த மைதானத்தில் அதிகமாக விளையாடி இருக்கிறேன். அதனால் இந்த பிட்ச் எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும். அது உதவியாக இருந்தது. இந்தப் போட்டியில் 50 பந்தில் 92 ரன்கள் எடுத்ததில் மகிழ்ச்சி. அணியின் வெற்றிக்கு இன்னும் அதிகமாக ரன்கள் குவிக்க வேண்டும். பேட்டிங்கின் போது வில்லியம்சனும் நானும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. இருவருமே ஆட்டத்தில் கவனம் செலுத்தினோம்’ என்றார்.
டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும்போது, ‘நாங்கள் எடுத்த 187 ரன்கள் நல்ல ஸ்கோர்தான். இரண்டாம் பாதியில் பிட்ச் பெரிய மாற்றத்தைக் கொடுத்துவிட்டது. நாங்கள், பவர் பிளேயில் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இது வருத்தமாக இருந்தாலும் ரிஷாப் ஆடிய விதம் அந்த வருத்தத்தை போக்கியது. ஐதராபாத் அணி பேட்டிங் செய்தபோது, அவர்களின் விக்கெட்டை எடுக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் வெற்றி பெற நாங்கள் தகுதியானவர்களாக இல்லை. அடுத்தடுத்தப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது அடுத்த வருட போட்டிக்கு மனரீதியாக எங்களை ஊக்கப்படுத்தும். அதோடு இந்த அனுபவம் அடுத்து நடக்கிற இந்தியா ஏ அணி உள்ளிட்ட போட்டிகளில் ஆட உதவும்’ என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
[ad_2]
Source link
No comments:
Post a Comment